விலையில்லா சைக்கிள்களில் உதிரிபாகங்கள் பொருத்தும் பணி தீவிரம்
பள்ளி மாணவர்களுக்கு வழங்க விலையில்லா சைக்கிள்களில் உதிரிபாகங்களை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் தமிழக அரசால் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில் பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்களின் உதிரிபாகங்கள் சென்னையில் இருந்து பெறப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு, நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 1,806 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 136 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா சைக்கிள்களின் உதிரிபாகங்கள் வந்துள்ளன.
உதிரிபாகங்களை பொருத்தும் பணி
விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளுக்கு வந்துள்ள சைக்கிள்களின் உதிரிபாகங்களை ஊழியர்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு பச்சை நிறத்திலான சைக்கிள்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது கடந்த ஆண்டு முதல் நீல நிற சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் முடிந்ததும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அனுப்பி வைக்கப்பட்டு மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.