தொழில் போட்டியில் பழைய இரும்பு பொருட்கள் கடை தீ வைத்து எரிப்பு
தொழில் போட்டியில் பழைய இரும்பு பொருட்கள் கடையை தீ வைத்து எரித்த மற்றொரு கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம் மெயின் ரோடு அம்பேத்கர் நகர் பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வந்தவர் ரூபாஸ்(வயது 38). கடந்த 9 வருடமாக இந்த பகுதியில் அவர் கடை நடத்தி வந்தார்.
இவரது கடைக்கு எதிரே ஜெகஜீவன் ராம் நகர் பகுதியில் தனேஷ் என்பவர் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். ரூபாஸ் கடை வைக்கும் முன்பே தனேஷ் அந்த பகுதியில் கடை வைத்திருந்தார்.
ரூபாஸ் கடை வைத்ததால் தனக்கு வியாபாரம் பாதிப்பதாக கூறி ரூபாசை கடையை காலி செய்ய சொல்லி தனேஷ் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் அவர்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை மூடி விட்டு ரூபாஸ் வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் அவரது கடை தீப்பிடித்து எரிவதாக அவருக்கு போன் வந்தது. உடனடியாக அவர் கடைக்கு சென்றார். ஆனால் அதற்குள் அவரது கடை முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கிருந்த இருசக்கர வாகனங்கள், பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின.
இது தொடர்பாக சேலையூர் போலீசில் ரூபாஸ் புகார் செய்தார். அதில் தனேஷ் மற்றும் அவரது கடையில் வேலை செய்த ஊழியர் ஸ்ரீராம்(22) ஆகியோர் தொழில் போட்டியில் தனது கடையை தீ வைத்து எரித்ததாக புகார் அளித்தார். இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தனேசை தேடி வருகின்றனர்.