இந்தியா-இலங்கை கடற்படைகள் பேச்சுவார்த்தை: மனிதாபிமானத்துடன் நடக்க வலியுறுத்தல்


இந்தியா-இலங்கை கடற்படைகள் பேச்சுவார்த்தை: மனிதாபிமானத்துடன் நடக்க வலியுறுத்தல்
x

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை,

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான 32-வது சர்வதேச கடல்சார் எல்லை (ஐ.எம்.பி.எல்.) தொடர்பான ஆலோசனை கூட்டம் 4-ந் தேதி நடைபெற்றது.

வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்படை கப்பலான சயூராவில் இந்த கூட்டம் நடந்தது. இந்திய கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் வெங்கட்ராமன் மற்றும் இலங்கை கடற்படையின் வடக்கு பகுதி தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் தென்னக்கோன் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கருத்து பகிர்ந்தனர்.

பாக் நீரிணை பகுதியில் இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்திய மீனவர்களிடம் இலங்கை கடற்படை உள்ளிட்ட அந்நாட்டு பாதுகாப்பு முகமைகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்பினரும் உடனடியாக செயல்படக்கூடிய பிரச்சினைகளில் பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக்கொள்வது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு நாட்டு உறவிலும் உள்ள பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான களமாக இந்த கூட்டம் அமைந்திருந்தது.

மத்திய பாதுகாப்புத்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.


Next Story