சுதந்திர தின விடுமுறை: சென்னையில் இருந்து நாளை சிறப்பு பஸ்கள் இயக்கம்


சுதந்திர தின விடுமுறை: சென்னையில் இருந்து நாளை சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

கோப்புப்படம்

சுதந்திர தின விடுமுறை சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னை,

தொடர் விடுமுறைகள் மற்றும் பண்டிகை காலங்களின் போது மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம்.

இந்நிலையில் சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தற்போது சிறப்பு பஸ்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்ப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (புதன்கிழமை) 470 பஸ்களும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மற்றும் சனிக்கிழமை 365 பஸ்களு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (புதன்கிழமை) 70 பேருந்துகளும், நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) மற்றும் சனிக்கிழமை 65 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்திலிருந்து புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் 20 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 1,190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story