'அரசியலில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அவதூறுகள்...' - சத்குரு கடும் கண்டனம்
பெண்களுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை மாற்ற வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பெண் அரசியல் தலைவர்களுக்கு எதிராக அருவருக்கதக்க வகையில் அசிங்கமாக பேசும் நபர்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;-
"கடந்த 2 வாரங்களாக, பொது வெளியில் பெண்களுக்கு எதிராக என்னென்ன மாதிரியான வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நான் கவனித்து வருகிறேன். ஒருவர் 'விலை பட்டியல்' (ரேட் கார்டு) உடன் பெண் அரசியல் தலைவரை ஒப்பிட்டு பேசுகிறார். இன்னொருவர் 75 வயது பெண்மணி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார். மற்றொருவர் 60 வயதை கடந்த பெண் அரசியல் தலைவரின் பிறப்பு குறித்து அசிங்கமாக பேசுகிறார்.
நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் இதுபோன்ற நபர்களுக்கு தடை விதியுங்கள். பெண்களுக்கு எதிரான அசிங்கமான, அவதூறு பேச்சுகள் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து இடங்களிலும் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான இந்த 'கருத்துருவாக்கத்தை' மாற்றாவிட்டால், வேறு எதையும் உங்களால் மாற்ற முடியாது.
ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள பிரபலங்கள் உட்பட அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பெண்களுக்கு எதிராக அசிங்கமாக பேசும் நபர்களுக்கு தடை விதியுங்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.