அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 July 2023 9:48 PM IST (Updated: 6 July 2023 3:34 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர்

தளி

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.

அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 1600 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டு உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு உயர்வதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டமாக காணப்படுவதால் கனமழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.

திருமூர்த்தி அணை

ஆனால் உடுமலைப் பகுதியில் உள்ள மற்றொரு நீர்த்தேக்கமான திருமூர்த்தி அணை நீர்வரத்து கிடைக்காமல் தவித்து வருகிறது.காண்டூர் கால்வாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தண்ணீர் திறப்பதற்கான சூழல் இல்லை. ஆனாலும் பாசன பரப்புகளில் இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் தண்ணீர் பற்றாக்குறையால் தவிர்த்து வந்த பயிர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது.


Next Story