காவிரி ஆற்றில் நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


காவிரி ஆற்றில் நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
x

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஒகேனக்கலில் இன்று நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது காவிரி ஆற்றில் நீர்வரத்தை பார்வையிட்டார். அப்போது கலெக்டர் சாந்தி கூறியதாவது:-

"கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து 75 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த 19-ந்தேதி நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக இருந்தது. தற்போது வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வினாடிக்கு 1 லட்சம் கன அடி வரை நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது."

இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.


Next Story