நவ.5ஆம் தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு..!!
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
நீண்ட நாட்களாக கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துவந்தநிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான செய்திக்குறிப்பில்"ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், நுகர்வோர்களின் நலன் கருதி, கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய்.3- குறைக்கப்பட்டது. பால்கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும்.
இச்சூழ்நிலையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி, ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி. ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் வழங்கப்படும்.
நாளை மறுநாள் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்த கொள்முதல் விலை உயர்வால், சுமார் 4.20 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.