ரூ.1.12 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
ரூ.1.12 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டன.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லாடபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.42 லட்சம் மதிப்பிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் கீழப்பெரம்பலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பிலும் மற்றும் வ.கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.42 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்கள், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கற்பகம் கீழப்பெரம்பலூர் மற்றும் வ.கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் குத்துவிளக்கு ஏற்றி பள்ளிக் கட்டிடத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். லாடபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பிரபாகரன் எம்.எல்.ஏ. மற்றும் ஒன்றியக்குழு தலைவர் மீனா அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மாணவ, மனைவிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.