கப்பல் வடிவில் வீட்டை கட்டி அசத்திய என்ஜினீயர்


கப்பல் வடிவில் வீட்டை கட்டி அசத்திய என்ஜினீயர்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கப்பலில் செல்ல ஆசைப்பட்ட மனைவிக்காக, கப்பல் வடிவிலேயே வீட்டை கட்டி என்ஜினீயர் ஒருவர் அசத்தியுள்ளார்.

கடலூர்

மனைவி மீது வைத்துள்ள அபரீதமான அன்பை வெளிகாட்டும் விதமாக கணவர்கள் பல்வேறு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. அதாவது மனைவிக்காக சிலைகள் வைப்பதும், கோவில் கட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

அந்த வகையில் கப்பலில் செல்ல வேண்டும் என நினைத்த மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கடலூரில் என்ஜினீயர் ஒருவர் கப்பல் வடிவிலேயே வீடு ஒன்றை கட்டி அசத்தியுள்ளார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் சிங்காரத்தோப்பை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 42). இவரது மனைவி சுபஸ்ரீ (41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மரைன் என்ஜினீயரான சுபாஷ், கடந்த 15 ஆண்டுகளாக சரக்கு கப்பலில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சுபஸ்ரீ, பெரிய கப்பலில் செல்ல ஆசையாக இருப்பதாக தனது கணவரிடம் நீண்ட நாட்களாக தெரிவித்து வந்துள்ளார். ஆனால் அந்த ஆசையை சுபாஷால் நிறைவேற்ற முடியவில்லை.

இருப்பினும் மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என நினைத்த சுபாஷ், தனது மனைவி வாழ்நாள் முழுவதும் கப்பலில் தங்கியிருப்பதை போல் உணர வேண்டும் என்பதற்காக கப்பல் வடிவிலேயே வீடு கட்டி பரிசளிக்க முடிவு செய்தார்.

பிரமாண்ட வீடு

இதற்காக கடலூர் வண்ணாரப்பாளையத்தில் இடம் வாங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்ட தொடங்கினார். அதன்படி கப்பலை சுற்றிலும் தண்ணீர் கிடப்பது போலவும், படிக்கட்டுகள், அறைகள் என அனைத்தும் கப்பலில் இருப்பது போன்றே கட்டி முடித்தார். தற்போது பிரமாண்ட கப்பல் போன்று தோற்றம் அளிக்கும் அந்த வீட்டை தனது மனைவிக்கு பரிசாக அளித்துள்ளார்.

இந்த வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கேப்டன் அமர்ந்து கப்பலை ஓட்டும் விதமாக ஒரு அறையும் அமைத்து அசத்தியுள்ளார். இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் அந்த வீட்டை பார்க்கும் போது, கடலில் கப்பல் செல்வது போன்றே காட்சியளிக்கிறது.

கப்பல் போன்று கட்டப்பட்டுள்ள அந்த வீட்டை, வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.


Next Story