நள்ளிரவில் திடீர், திடீரென தீப்பிடித்து எரியும் கடை, குடிசை வீடுகள் - கிராம மக்கள் பீதி
இதுவரை 5 குடிசை வீடுகள், 3 வைக்கோல் போர்கள் தீக்கிரையாகியுள்ளன.
கடலூர்,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நள்ளிரவில் குடிசை வீடுகள் திடீர், திடீரென தீப்பிடித்து எரிகிறது. மாடுகளுக்கு தீவனத்திற்காக வைத்திருந்த வைக்கோல் போர்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. இதுவரை 5 குடிசை வீடுகள், 3 வைக்கோல் போர்கள் தீக்கிரையாகியுள்ளன.
வீடுகளுக்கும், வைக்கோல் போர்களுக்கும் யாரேனும் தீ வைத்து எரிக்கிறார்களா?, எதற்காக வீடுகள் பற்றி எரிகிறது? என்பது குறித்து தெரியாமல் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுபற்றி அந்த பகுதி மக்கள் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நேற்று மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கல்குணம் கிராமத்தின் பக்கத்து ஊரான மீனாட்சிப்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சக்திவேல் (வயது 48). இவர் அதே பகுதியில் கடலூர்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் தள்ளுவண்டியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், தள்ளுவண்டியை பூட்டிவிட்டு சக்திவேல் வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவு 11.30 மணி அளவில் திடீரென இந்த தள்ளுவண்டி கடை தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக காரில் வந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, அவர் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தள்ளுவண்டி கடை முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.