மாவட்டத்தில் 1,111 மையங்களில் எழுத்தறிவு திட்டம் தொடங்கியது21 ஆயிரத்து 453 பேர் பயன்பெறுகிறார்கள்
மாவட்டத்தில் 1,111 மையங்களில் எழுத்தறிவு திட்டம் தொடங்கியது இதனால் 21 ஆயிரத்து 453 பேர் பயன்பெறுகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 453 பேர் பயன்பெறும் வகையில் 1,111 மையங்களில் எழுத்தறிவு திட்டம் நேற்று தொடங்கியது.
எழுத்தறிவு திட்டம்
நாடு முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எழுத்து கற்பிக்கும் வகையில் வயது வந்தோர் கல்வித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்த திட்டம் புதிய ஐந்தாண்டு வயது வந்தோர் கல்வித்திட்டம் - புதிய பாரத எழுத்தறிவு திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 2022-ம் ஆண்டு தொடங்கி 2027 வரை நடைமுறையில் இருக்கும்.
2-வது கட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசு பள்ளிக்கூடங்கள், சமுதாய கூடங்கள், தொழிற்சாலை அலுவலகங்களில் எழுத்தறிவு மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
வகுப்பு தொடக்கம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தைராஜன் தலைமையில் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ஜோதிசந்திரா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மையங்கள் தொடங்கப்பட்டன.
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நேற்று மாலை புதிய பாரத எழுத்தறிவு திட்ட வகுப்புகள் தொடங்கின. ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த மூத்தோர் பலரும் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் ரேவதி திருநாவுக்கரசு, பிரவீணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி திட்டம் குறித்து எடுத்துக்கூறினார். தன்னார்வல பயிற்றுனர் ஆயிஷா பாடம் நடத்தினார். முன்னதாக கணினி ஆசிரியை கவிதா வரவேற்றார். ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கே.லதா நன்றி கூறினார்.
1,111 மையங்கள்
இதேபோல் மாவட்டம் முழுவதும் 1,111 மையங்களிலும் நேற்று வகுப்புகள் தொடங்கின. இதன் மூலம் 21 ஆயிரத்து 453 பேர் எழுத்தறிவு பெறுவார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் தினமும் 1½ மணி நேரம் வீதம் மொத்தம் 200 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும். வகுப்பு நிறைவில் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
ஏற்கனவே கடந்த 2022-2023-ம் ஆண்டில் நடந்த புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில் சிறப்பாக செயல்பட்டதாக அந்தியூர் ஒன்றியம் கெட்டிசமுத்திரம் காலனி அரசு நல தொடக்கப்பள்ளி மையம், மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மையம், பவானிசாகர் ஒன்றியம் சொலவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மையம் என 3 மையங்களுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.