இலங்கை தங்க வியாபாரி தொடர்ந்த வழக்கில்மதுரை விமான நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்தவர்களிடம் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த 3 கிலோ 200 கிராம் தங்கத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய வழக்கில் விமான நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இலங்கை வியாபாரி
இலங்கையை சேர்ந்த ஷாஜகான் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தற்காலிக சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ள நான், இலங்கையின் மாதளை மாவட்டத்தில் குடியிருந்து வருகிறேன். துபாயின் தங்கசந்தையில் மொத்த விலையில் தங்கம் கொள்முதல் செய்து இலங்கையில் உள்ள நகைக்கடைகளுக்கு சில்லறையில் விற்பனை செய்து வருகிறேன். இதற்காக வழக்கமாக துபாயில் இருந்து தங்கள் மற்றும் வெள்ளி பார்களை சுங்கவரி செலுத்தி உரிய ஆவணங்களுடன் விமானம் மூலம் கொண்டு சென்று இலங்கை நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அங்குள்ள நகைக்கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறேன்.
இதற்கிடையே, கடந்த மாதம் 15-ந் தேதி துபாயில் இருந்து 2 கிலோ தங்கம் வாங்கிக்கொண்டு பணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் சுங்கக்கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் தனியார் விமானத்தில் இலங்கை சென்று கொண்டிருந்தேன். எனது விமானத்தில் இருந்து கொழும்பு செல்வதற்கான இணைப்பு விமானம் மதுரையில் இருந்து புறப்படுவதால், கடந்த மாதம் 16-ந் தேதி மதுரை விமான நிலையம் வந்திருந்தேன். அப்போது நானும், எனது நண்பரும் ஒரு கிலோ 200 கிராம் தங்கத்துடன் உரிய ஆவணங்களுடன் காத்திருப்பு அறையில் அமர்ந்து இருந்தோம்.
3 கிலோ 200 கிராம்
அப்போது, மதுரையில் உள்ள சுங்கத்துறை துணை கமிஷனர் அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாக கூறி 2 பேர் தங்கம் குறித்து என்னிடம் விசாரணை நடத்தினர். ஆனால், துபாயில் இருந்து இலங்கை செல்வதற்காக வந்திருப்பதாகவும், இந்தியாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, என்னிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்தும் வலுக்கட்டாயமாக சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அதையடுத்து என்னிடம் இருந்த 2 கிலோ தங்கத்துக்கான உரிய ஆவணங்களை அவர்களிடம் காண்பித்தேன்.
அவர்கள் 2 பேரும் என்னிடம் இருந்த தங்கத்தை பறித்துக்கொண்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் என்னையும், என்னுடன் வந்திருந்த நண்பரையும் அங்குள்ள கழிப்பறைக்கு அழைத்து சென்று அவரிடம் இருந்த ஒரு கிலோ 200 கிராம் தங்கத்தை பறித்துக்கொண்டதுடன் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.
எங்களிடம் இருந்த செல்போனை பறித்து அதிலிருந்த சிம் கார்டை வெளியில் எடுத்து, செல்போனை ரீ செட் (அனைத்து பதிவுகளையும் அழித்து) செய்து விட்டனர். அதேபோல, எங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3 கிலோ 200 கிராம் தங்கத்துக்கான பறிமுதல் ஆவணம் தரவில்லை. அதற்கு பதிலாக 3 வெற்று தாள்களில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி கொண்டனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
பறிமுதல் செய்த தங்கத்தை பெறுவதற்காக கடந்த மாதம் 24-ந் தேதி சென்னையில் உள்ள தலைமை சுங்கத்துறை கமிஷனர், விமானப்போக்குவரத்து இணை இயக்குனர், திருச்சி சுங்கத்துறை கமிஷனர், மதுரை சுங்கத்துறை துணை கமிஷனர் மற்றும் மதுரை விமான நிலைய இயக்குனர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன்.
கடந்த மாதம் 16-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான மதுரை விமானநிலையத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழித்துவிடாமல் பாதுகாக்கவும், எங்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 3 கிலோ 200 கிராம் தங்கத்தை ஒப்படைக்கவும், சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொண்ட மதுரை சுங்கத்துறை துணை கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மதுரை விமான நிலையத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை பதிவான கண்காணிப்பு கேமரா. காட்சிகளை வழக்கு விசாரணை முடியும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தற்காலிக உத்தரவு பிறப்பித்ததுடன், விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.