சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தி.மு.க. அரசு தூங்குவது போல் நடிக்கிறது - அன்புமணி ராமதாஸ்


சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தி.மு.க. அரசு தூங்குவது போல் நடிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 10 Dec 2023 1:30 AM IST (Updated: 10 Dec 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

பீகாரை தொடர்ந்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான முன்னெடுப்பை தொடங்கியுள்ளனர் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மதுரை,

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

பீகார் மாநில அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அனைத்து உரிமைகளும், சட்டங்களும் இருக்கின்றன என பிரபல சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என தவறான கருத்தை முதல்-அமைச்சர் கூறி வருகிறார்.

பீகாரை தொடர்ந்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான முன்னெடுப்பை தொடங்கியுள்ளனர். ஆனால் சமூகநீதி பேசும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை.

சமூகநீதி என்பது பின்தங்கிய சமுதாயத்தை உயர்த்துவதுதான். மத, மொழி ரீதியாக இடஒதுக்கீடு இல்லை. ஆனால் சாதி ரீதியாக இடஒதுக்கீடு செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என தெரியவில்லை.

சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்தி, பின்தங்கியவர்களுக்கு உதவி செய்வதுதான் சமூக நீதி. 6 முறை ஆங்கிலேயர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தார்கள். அதன் நன்மை ஆங்கிலேயருக்கு புரிந்தது. ஆனால் இப்போதைய தி.மு.க. அரசுக்கு புரியவில்லை. தி.மு.க. அரசு இந்த விஷயத்தில் புரிந்தும், புரியாதது போலும், தூங்குவது போலும் நடிக்கிறது. தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story