கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விவசாயிகள் இடுபொருட்களை உழவன் செயலியில் முன்பதிவு செய்தால் முன்னுரிமை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விவசாயிகள் இடுபொருட்களை உழவன் செயலியில் முன்பதிவு செய்தால் முன்னுரிமை
x
தினத்தந்தி 12 Jun 2023 12:48 PM IST (Updated: 12 Jun 2023 1:48 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் இடுபொருட்களை உழவன் செயலியில் முன்பதிவு செய்தால் முன்னுரிமை வேளாண் அதிகாரி தகவல்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் இடுபொருட்களை உழவன் செயலியில் முன்பதிவு செய்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என தளி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர் பாதுகாப்பு

உழவன் செயலியில் தற்போது 21 வகையான சேவைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில, மத்திய அரசால் வழங்கப்படும் மானியத்திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம், விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் உள்ள உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்களை இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் உரங்கள் இருப்பு நிலை, விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள் அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் மற்றும் தனியார் துறையில் இருப்பு உள்ளதா? இல்லையா? கிலோ என்ன விலை? என சில நிமிடங்களில் அறிந்து கொள்ளலாம். விதை இருப்பு நிலை, குறைந்த விலையில் வாடகைக்கு எந்திரங்கள் பெறுவது, சந்தை விலை நிலவரம், வானிலை தெரிந்து கொண்டு அதற்கேற்ப விவசாய பணிகளான களையெடுத்தல், உரமிடுதல், பயிர் பாதுகாப்பு, மருந்துகள் தெளித்தல், வேளாண் நிதி நிலை அறிக்கை, தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்ற விண்ணப்பம் செய்ய உதவிட வேளாண் வளர்ச்சித்திட்டம் என அரசால் வழங்கப்படும் அனைத்து பயன்களையும் அறிந்து கொள்ளலாம்.

இடுபொருட்கள்

எனவே விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்திட வேண்டும். இதனை கூகுளில் பிளே ஸ்டோர் என்ற பகுதிக்கு சென்று `உழவன்' என டைப் செய்து ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் செல்போன் எண், குடியிருப்பு விவரங்களை பதிவு செய்து இந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்தலாம். தற்போது தங்களுக்கு தேவையான இடுபொருட்களை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத முன்னுரிமை வழங்கப்படுவதால் இந்த வாய்ப்பினை அனைவரும் தவறாது பயன்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story