கடமலை-மயிலை வட்டாரத்தில் 2,633 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு : கலெக்டர் தொடங்கி வைத்தார்
கடமலை-மயிலை வட்டாரத்தில் 2,633 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
காலை உணவு திட்டம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் இந்த திட்டம் முதற்கட்டமாக கடமலை-மயிலை வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இதன் தொடக்க விழா ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, இந்த திட்டப் பணியை தொடங்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து கலெக்டர் உணவு அருந்தினார்.
2,633 மாணவ, மாணவிகள்
விழாவில் கலெக்டர் முரளிதரன் கூறுகையில், "கடமலை-மயிலை வட்டாரத்தில் 51 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1,342 மாணவர்கள், 1,291 மாணவிகள் என மொத்தம் 2,633 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி திங்கட்கிழமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை சேமியா, காய்கறி கிச்சடி மற்றும் சாம்பார், புதன்கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி அப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை ரவா கிச்சடி, சாம்பார் மற்றும் ரவா கேசரி ஆகியவை காலை உணவாக வழங்கப்பட உள்ளது" என்றார்.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர் ராஜ், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தாமரைக்கண்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, ஒன்றியக்குழு தலைவர் சித்ரா, ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.