ஈரோடு கோட்டை கோவிலில் பெருமாளுக்கு தைல காப்பு

ஈரோடு கோட்டை கோவிலில் பெருமாளுக்கு தைல காப்பு செய்யப்படுவதால் 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.
ஈரோடு கோட்டையில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மூலவரான கஸ்தூரி அரங்கநாத பெருமாள் சிலை சுதையால் செய்யப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை ஆனி மாதம் கஸ்தூரி அரங்கநாதர் மூலவர் சிலைக்கு தைல காப்பு சாற்றப்படுகிறது. அதன்படி ஆனி மாதம் கேட்டை நட்சத்திரமான நேற்று அனந்த சயனத்தில் இருக்கும் கஸ்தூரி அரங்கநாதருக்கு தைல காப்பு சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி மற்றும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உற்சவருக்கு திருமஞ்சனமும், மூலவருக்கு தைல காப்பு சாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவர் சிலை மூலஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மூலவர் சிலைக்கு தைல காப்பு சாற்றப்பட்டு உள்ளதால், 48 நாட்களுக்கு மூலவரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் திரையிட்டு மூலவர் சிலை மறைக்கப்பட்டு உள்ளது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதரின் உற்சவர் சிலையை தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மூலவர் கஸ்தூரி அரங்கநாதருக்கு தைல காப்பு சாற்றப்பட்டு உள்ளது. இதனால் தைல காப்பில் மூலவர் கதகதப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே 48 நாட்களுக்கு பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியாது. மூலவர் சன்னதியிலேயே உற்சவரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்", என்றார்.






