தூத்துக்குடியில் பணியை புறக்கணித்துவருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடியில் பணியை புறக்கணித்து வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகம், உதவிகலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று பணி புறக்கணிப்பு செய்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஞானராஜ் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் செந்தூர்ராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் வாழ்த்தி பேசினார். போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர்கள் வரையிலான ஊழியர்கள் பங்கேற்று இருந்தனர். முடிவில் வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகி குமரன் நன்றி கூறினார்.
பாதிப்பு
போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள 10 தாலுகா அலுவலகங்கள், 3 உதவி கலெக்டர் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றி வரும் சுமார் 500 வருவாய்த்துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டன.