'இந்தியா கூட்டணி' ெவற்றி பெற்றால் பட்டாசு தொழில் வளர்ச்சி அடையும்
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பட்டாசு தொழில் வளர்ச்சி அடையும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
சிவகாசி,
நூற்றாண்டு விழா
விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தீப்பெட்டி, பட்டாசு தொழில் நூற்றாண்டு விழா நேற்று மாலை சிவகாசி பாவடி தோப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளி ராஜன், யூனியன் துணைத்தலைவர் விவேகன் ராஜ், சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
பல தடைகளை தாண்டி சிவகாசி தீப்பெட்டி, பட்டாசு தொழில் நூற்றாண்டை கடந்துள்ளது. மோடி அரசில் பட்டாசு தொழிலுக்கு பல சோதனைகள் வந்தது.
பட்டாசு தொழில்
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பட்டாசு தொழில் வளர்ச்சி அடையும். ஏற்றுமதிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உலக அளவில் பட்டாசு தொழிலை கொண்டு செல்ல இந்தியா கூட்டணி தலைவர்கள் விரும்புகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் வருகிற தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்காமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படும். பட்டாசுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. முதலில் அப்பகுதியில் வைக்கோல் எரிப்பதை டெல்லி அரசு தடை செய்ய வேண்டும்.
டெல்லி பயணம்
டெல்லி சுற்றுச்சூழல் மாசுக்கு பட்டாசு காரணம் இல்லை என்பதை அந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் தமிழக காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு தரும்.
அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அவர் திரும்பும் போது தலைவராகவே வருவாரா? அல்லது புது தலைவர் வருவாரா? என பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.