ஆற்று மணலை பாதுகாக்க வழி என்ன?
ஆற்று மணலை பாதுகாக்க வழி என்ன? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
ஆற்று மணலை பாதுகாக்க வழி என்ன? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
சட்டவிரோத குவாரிகள்
கரூரைச் சேர்ந்த குணசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
கரூர் காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் செயல்படும் குவாரிகளால் ஆற்றில் சுமார் 20 அடி வரை பள்ளம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் சீமை கருவேல மரங்கள் புதர் போல நிரம்பிவிட்டன. இந்த குவாரிகள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் செயல்படவில்லை.
மணல் அரிப்பால் கரூர்-நாமக்கல் ரெயில் பாலம் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான போக்குவரத்து பாலங்கள் அடித்தளம் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தையும் பாதிக்கும் வகையில் கரூர் காவிரி ஆற்றில் உள்ள சட்டவிேராத குவாரிகளை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் கேள்வி
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மணல் குவாரிகள் அரசு விதியின்படியே செயல்படுகின்றன. மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தி பல்வேறு வழிமுறைகளை பிறப்பித்து கண்காணிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், பாதுகாக்கப்பட வேண்டிய தாதுமணலை மத்திய அரசு கண்காணிப்பதை போல, ஆற்று மணலை பாதுகாக்க ஏன் நடவடிக்கை கூடாது? இதற்கு ஏதேனும் வழி உள்ளதா?" என கேள்வி எழுப்பினர்.
விசாரணை முடிவில், மனுதாரர் குற்றச்சாட்டு சம்பந்தமான மணல் குவாரிகள் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்தது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் அறிக்கையை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.