'நிலத்தை அபகரித்ததால் வீட்டிற்கு தீ வைத்தேன்'-மூதாட்டி கொலையில் கைதானவர் வாக்குமூலம்


நிலத்தை அபகரித்ததால் வீட்டிற்கு தீ வைத்தேன்-மூதாட்டி கொலையில் கைதானவர் வாக்குமூலம்
x

நிலத்தை அபகரித்ததால் வீட்டிற்கு தீ வைத்தேன் என்று மூதாட்டி கொலையில் கைதானவர் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

ராமநாதபுரம்

தொண்டி,

நிலத்தை அபகரித்ததால் வீட்டிற்கு தீ வைத்தேன் என்று மூதாட்டி கொலையில் கைதானவர் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

வீட்டுக்கு தீ வைப்பு

திருவாடானை அருகே உள்ள அழகமடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராசு. இவருக்கும் அவரது உறவினரான சித்திரவேலு (வயது 74) என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சித்திரவேலு, ராசுவின் வீட்டிற்கு தீ வைத்தார். இதில் ராசுவின் தாயாரான 95 வயது மூதாட்டியான பாப்பு அம்மாள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் ராசுவும் அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவத்தின் போது சித்திரவேலு தனது வீட்டிற்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சித்திரவேலு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோர்ட்டில் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து நேற்று போலீசார் சித்திரவேலுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது சித்திரவேலு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நிலம் அபகரிப்பு

எனக்கும் ராசு குடும்பத்திற்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. எங்களுக்கு சொந்தமான சொத்துகளை ராசுவின் தம்பி சர்வேயர் என்பதால் அவர்களது பெயரில் பட்டா மாற்றம் செய்து விட்டனர். எங்களுக்கு உரிய சொத்தை அபகரித்துக் கொண்டதுடன் எனது வீட்டையும் இடித்து விட்டனர். சொத்தை நில அளவீடு செய்வது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பெற்று வந்த பின்னரும் நிலத்தை அளவீடு செய்து கொள்வதற்கு ராசு மற்றும் அவரது குடும்பத்தினர் ஒத்துழைக்கவில்லை. மேலும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராவதில்லை.

ராசுவின் குடும்பத்தினர் எனக்கு செய்த கொடுமைகளால் மனம் வெறுத்து இனி உயிருடன் வாழ வேண்டுமா என்று யோசித்து அவர்களையும் தீர்த்து கட்டி விட்டு நானும் சாக முடிவு செய்தேன். அதன் அடிப்படையில் தான் ராசு வீட்டிற்கு தீ வைத்து விட்டு நானும் சாக முடிவு செய்தேன். அப்போது ஒருவர் என்னை சமாதானம் செய்து தேவகோட்டை அழைத்துச் சென்றார். ராசுவின் தாயார் பாப்பு அம்மாள் இறந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. இனிமேல் நம்மை போலீசார் பிடித்தால் அடிப்பார்கள் என்று பயந்து அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனேன் என்று அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

சித்திரவேலுவிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிபதி உத்தரவின் பேரில் சித்திரவேலுவை போலீசார் மதுரை சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story