நீங்கள் ஆணையிட்டால் நான் தயார்..!! லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய்
லியோ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடைபெற்றது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்தது. மேலும் முதல் வாரத்தில் 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடைபெற்றது.
லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய தயாரிப்பாளர் லலித் குமார், "சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுத்ததுக்குத் தமிழக அரசுக்கு நன்றி. 'மாஸ்டர்' படம் ஓடிடில ரிலீஸ் பண்ண பெரிய ஆபர் வந்தது. ஆனால், விஜய் சார், என் படம் தியேட்டர்லதான் வரணும்னு சொன்னாரு. படம் எடுக்குறது ஈசி, ஆனா அதை ரிலீஸ் பண்றது கஷ்டம். பிரச்சினை எந்த வடிவுல வரும்னு தெரியாது. எந்தப் பிரச்சினை வந்தாலும் நான்கூட இருக்கேன்னு சொன்னார் விஜய் சார். இசை வெளியீட்டு விழா ரத்தானதும் உங்களைவிடவும் நான் 10 மடங்கு வருத்தத்தில் இருந்தேன். அன்று இரவே, படத்தின் வெற்றி விழாவை மிகப்பெரியதாக நடத்த முடிவு செய்தேன். 'படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகு நடத்தலாம், நான் வர்றேன்' என்றார் விஜய்" என்று கூறினார்.
விழாவில் பேசிய நடிகை திரிஷா, " எல்லோருக்கும் முதலில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இதற்கு ரசிகர்கள் தான் காரணம். லியோ ஒரு சுற்றுலா போல இருந்தது. ஒரு ஸ்கூலில் படித்த நண்பனை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் எனக்கு விஜய்யை பார்க்கும் போது இதில் இருந்தது. சினிமா துறையில் நான் அதிக வருடங்களாக நட்பில் இருக்கும் நபர் விஜய் தான். விஜய்யிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே இருக்கிறார்.
அமைதியும், வெற்றியும் தான் சரியான பதிலடியாக இருக்கும் என்று சொல்வார்கள். அது லியோவிற்கு நடந்து இருக்கிறது. நான் பல வெற்றி இயக்குநர்கள் உடன் வேலை பார்த்து இருக்கிறேன். அதில் சிலர் மட்டும் தான் அவர்கள் அவர்களாவே இருப்பர். அதில் ஒருவராக லோகேஷ் இருக்கிறார். அவர் என்னிடம் சில வருடங்களுக்கு முன்னர் இந்த கதையை சொன்னார். அவர் சொன்ன படியே எடுத்தார். எந்த மாற்றமும் செய்யவில்லை. நல்ல வேளை அவர் என்னை படத்தில் கொல்லவில்லை. அவரிடம் அப்படி போடு போல ஒரு பாட்டு கேட்டேன்" என்று அவர் கூறினார்.
விழாவில் பேசிய நடிகர் அர்ஜூன், விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்டார். விஜய்யாக இருப்பது கஷ்டமா? ஈசியா? என்று கேட்டார். அதற்கு விஜய், வெளியே இருந்து பார்ப்பதற்கு கஷ்டமா தெரியும், ஆனா எனக்கு ரொம்ப ஈசி. ஏனா ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி. லவ் யூ. பூஜைக்குப் பிறகு இந்தப் படம் தொடர்பாக எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை. முதல் மேடை, வெற்றி விழா மேடை என்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் எந்த புரமோஷனும் படத்துக்கு செய்யவில்லை. இசை வெளியீட்டு விழா நடக்காதது எனக்கும் வருத்தம்தான். கடைசி 20 நாட்கள் எடிட்டர் பிலோமின் ராஜ் ஸ்டூடியோவிலேயே தங்கியிருந்த எனது உதவி இயக்குநர்கள் 18 பேரை மேடைக்கு அழைக்கிறேன் என்று கூறி அவர்களை அழைத்து கவுரப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இயக்குநர் வெற்றிமாறனை எனது 2-3 படங்களில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் அதை மறுத்துவிட்டார். அவரை நடிகராக மாற்ற வேண்டும் என ஆசை. விரைவில் அப்படி மாற்றுவேன் என நினைக்கிறேன். படத்தின் இறுதி வெர்ஷனை பார்த்துவிட்டு விஜய் அண்ணா என்னை கட்டி அணைத்து முத்தமிட்டார். மிகவும் சந்தோஷமாக இருந்தது" என்றார்.
இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் விஜய், "யாரையும் புண்படுத்த வேண்டாம். அது நமது வேலை இல்லை. நமக்கு நிறைய வேலை உள்ளது. அகிம்சைதான் உண்மையான, வலிமையான ஆயுதம். உங்களது உழைப்பில் எனக்காக செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் நான் உண்மையாக இருப்பேன்.
சினிமாவை சினிமாவாக பாருங்கள். உலகம் முழுவதும் சினிமாவை அப்படித்தான் பார்க்கின்றனர். டயலாக்காக பேசுகிறேன் என்று நினைக்காமல் உண்மையாக சொல்கிறேன். நான் குடியிருக்கும் கோவில் நீங்கள்தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவ்வளவு அன்பு வைத்துள்ள உங்களுக்கு நான் என்ன செய்ய போகிறேன்.
என் மீது அன்பு வைத்துள்ளவர்களே படம் பிடிக்கவில்லை என்றால் வெளிப்படையாகவே அதை கூறி விடுகின்றனர். நம் இலக்கும் கனவும் பெரிதாக இருக்க வேண்டும். எதை ஜெயிக்க முடியாதோ அதை ஜெயிக்கனும் அதான் முக்கியம்
சினிமாவில் புரட்சித் தலைவர், நடிகர் திலகம், உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தல என்றால் அனைத்திற்கும் ஒருவர்தான்... தளபதி என்றால் உங்களுக்கே தெரியும். மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி.... நீங்கள் ஆணையிட்டால் நான் அதை செய்து முடிப்பேன்... 2026-ஆம் ஆண்டு பற்றி சொல்ல வேண்டும் என்றால் "கப்பு முக்கியம் பிகிலு".." என்று அவர் கூறினார்.