கும்மிடிப்பூண்டி அருகே மின்கசிவால் குடிசை எரிந்து விபத்து; மூதாட்டி கருகி சாவு
கும்மிடிப்பூண்டி அருகே மின்கசிவால் குடிசை எரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் மூதாட்டி கருகி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சிக்கு உட்பட்டது நாரசம்பாளையம் கிராமம். இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. நேற்று அதிகாலை இங்கு அடுத்தடுத்து உள்ள கூலித்தொழிலாளிகளான கோவிந்தராஜ் (வயது 90), உமாபதி (40) ஆகியோரின் குடிசைகள் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தன.
கோவிந்தராஜ் குடிசையின் வெளியே தூங்கி கொண்டிருந்த நிலையில், அவரது மனைவி ராஜம்மாள் (80) உட்புறம் தூங்கி கொண்டிருந்தார். தீப்பிடித்து குடிசையில் புகை பரவிய சூழலில், முதலில் எழுந்த ராஜம்மாள் குடிசையின் வெளியே வாசலில் தூங்கி கொண்டிருந்த கோவிந்தராஜை கூச்சலிட்டு எழுப்பி உள்ளார். இதில் சுதாரித்துக்கொண்ட கோவிந்தராஜ் தீ விபத்தில் இருந்து உயிர் தப்பினார்.
அதே சமயத்தில் குடிசையின் உள்ளே சிக்கிய மூதாட்டி ராஜம்மாள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அதே போல அருகே உள்ள குடிசையில் இருந்த உமாபதி, அவரது மனைவி கற்பகம் (35). மகள்கள் காயத்ரி (15), தமிழரசி (13) ஆகியோர் தீ விபத்து ஏற்பட்டதும் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். ஊராட்சி மன்ற தலைவர் ரவி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நேற்று அதிகாலை வரை தொடர்ந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வேறு எங்கும் தீ பரவாமல் இருப்பதற்காக அவர்கள் தீ தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் 2 குடிசைகளிலும் நகைகள், ரொக்கப்பணம், பாத்திரங்கள், துணிகள் மற்றும் அனைத்து பொருட்களும் முழுமையாக எரிந்து சாம்பலானது.
தீ விபத்தில் உயிரிழந்த ராஜம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் நேரில் சென்று ஆறுதல் கூறி பாதிக்கப்பபட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரவி உடன் இருந்தார். கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் வாயிலாக இந்த தீ விபத்து குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.