ஆன்லைன் பண மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?


ஆன்லைன் பண மோசடியில் இருந்து  தப்பிப்பது எப்படி?
x
தினத்தந்தி 10 April 2023 6:45 PM (Updated: 10 April 2023 6:47 PM)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலம் பண மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி? என சைபர்கிரைம் போலீசார் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

ராமநாதபுரம்


ஆன்லைன் மூலம் பண மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி? என சைபர்கிரைம் போலீசார் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

ஆன்லைன் மோசடி

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம்.கார்டினை புதுப்பிக்க வேண்டும் என்று ரகசிய எண்ணை பெற்று மோசடி செய்து வந்த நிலையில் அதன்பின்னர் பரிசு விழுந்திருப்பதாக கூறியும், செல்போன் டவர் அமைக்க இடம் தேவைப்படுவதாக கூறியும், ஆன்லைனில் பரிசு விழுந்திருப்பதாக கூறி அதனை பெற முன்பணம் செலுத்துமாறு கூறியும், முகநூல் பதிவில் பண உதவி கேட்டும், ஆபாச வீடியோ லிங்க் மூலம் பணம் கேட்டு மோசடி என பல்வேறு மோசடிகள் நாள்தோறும் நடந்துவருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இன்றளவும் படிக்காதவர்கள் மட்டுமல்லாது படித்தவர்களும் பேராசையின் மிகுதியால் ஏமாந்து கொண்டுதான் வருகின்றனர். இந்த மோசடி சம்பவங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடியால் பலர் ஏமாந்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் நூதன மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறோம். இதுகுறித்து தொழில்நுட்ப அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் பணம் மற்றும் வங்கி தொடர்பான எந்த குறுந்தகவல் மெசேஜையும் கண்டுகொள்ளக்கூடாது. எந்த தகவலாக இருந்தாலும் சிரமம் பார்க்காமல் வங்கிக்கே நேரடியாக சென்று விசாரித்து கொள்ள வேண்டும்.

ஆன்லைன் மூலம் பண மோசடி செய்து யாரையும் ஏமாற்றினால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற தேசிய சைபர் கிரைம் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்தால் மோசடி செய்து பெறப்பட்ட பணத்தினை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கினை முடக்கி யாரும் எடுக்காதவாறு கடும் நடவடிக்கை எடுத்துவிடலாம். அந்த பணத்தினை பல வங்கி கணக்கிற்கு மாற்றியிருந்தாலும் அனைத்து வங்கி கணக்கினையும் முடக்கி விடலாம். இதன்பின்னர் வழக்குபதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அந்த பணத்தினை திரும்ப பெற்றுவிடலாம். எனவே, இந்த 1930 என்ற எண் குறித்து மக்களிடம் தெளிவு படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Related Tags :
Next Story