அமைப்பு சாரா தொழிலாளர்கள் அரசின் சலுகைகளை பெறுவது எப்படி?


அமைப்பு சாரா தொழிலாளர்கள் அரசின் சலுகைகளை பெறுவது எப்படி?
x

அமைப்பு சாரா தொழிலாளர்கள் அரசின் சலுகைகளை பெற மத்திய அரசின் தேசிய தரவு தளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

சிவகங்கை

அமைப்பு சாரா தொழிலாளர்கள் அரசின் சலுகைகளை பெற மத்திய அரசின் தேசிய தரவு தளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள்

இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க 'அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம்' என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இந்த தரவு தளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சு வேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள், மர ஆலைத்தொழிலாளர்கள், உள்ளூர் கூலித் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. https://eshram.gov.in என்ற இணையதளத்தில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

கட்டணம் கிடையாது

இத்தரவுதளத்தில் பதிவு செய்து கொள்ளும் தொழிலாளர்களின் வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். மேலும் எந்தக்கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வங்கிக்கணக்குப் புத்தகம் போன்ற தேவையான விவரங்கள், மேலும், இத்தரவுகளைப் பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு Universal Account Number என்ற 12-இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும்.

அரசின் சலுகைகள்

அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்களுக்காகவோ புலம்பெயர நேர்ந்தாலும், அரசிடமிருந்து பெற வேண்டிய சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இந்த தரவுதளத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 'PM SURAKSHA' ' விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படும். எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த தரவு தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story