தாழக்குடி அருகே மழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் பலி
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதில் தாழக்குடி அருகே வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார்.
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதில் தாழக்குடி அருகே வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார்.
வீடு இடிந்து முதியவர் பலி
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. நேற்றும் மழை நீடித்தது.
இதே போல் ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடியை அடுத்த மீனமங்கலம் தெற்குதெருவை சேர்ந்தவர் வேலப்பன் (வயது 67). இவருடைய மனைவி பரமாயி. இவர்களுடைய மகன் மகேஷ் (45).
இதில் வேலப்பன் தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். அதன் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டில் மனைவி, மகன் தங்குவது வழக்கம். அது போல் நேற்று முன்தினம் இரவு வேலப்பன் ஓட்டு வீட்டில் தூங்க சென்றார். நேற்று காலை 6.15 மணிக்கு அந்த வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. உடனே சத்தம் கேட்டு மனைவி பரமாயி, மகன் மகேஷ் மற்றும் அந்த தெருவில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது வீடு இடிந்து தரைமட்டமாகி கிடந்தது. அங்கு கிடந்த ஓடு மற்றும் கம்புகளை அகற்றி பார்த்த போது வேலப்பன் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்தார். அதை பார்த்ததும் மனைவியும், மகனும் கதறி அழுதனர்.
உடல் மீட்பு
உடனே பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு வேலப்பன் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் வினைதீர்த்தான், வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா, ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். போலீசார் வேலப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.4 லட்சம் நிவாரணம்
முதியவர் வேலப்பன் குடும்பத்துக்கு அரசு பேரிடர் நிவாரண தொகையாக ரூ.4 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி தாழக்குடி கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வேலப்பன் மனைவி பரமாயிடம் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்கள்.
அப்போது மாவட்ட கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தோவாளை தாசில்தார் வினைதீர்த்தான், தாழக்குடி பேரூராட்சி தலைவர் சிவகுமார், வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா ஆகியோர் உடன் இருந்தனர்.