மேற்கு திப்பிப்பாறை மலைவாழ் குடியிருப்பில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்கள்
ஆனைமலை புலிகள் காப்பக மேற்கு திப்பிப்பாறை மலைவாழ் குடியிருப்பில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவித்து வருகிறார்கள்.
மலைவாழ் மக்கள்
அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்டது மேற்கு திப்பிபாறை குடியிருப்பு. இங்கு உள்ள குடியிருப்பை வீடுகள் என்று மார்தட்டி சொல்ல முடியாது. காற்றில் பறக்கின்ற பிளாஸ்டிக் காகிதத்தை வைத்து சணல் கொண்டு கட்டி திறந்தவெளி கூடாரமாய் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சுற்றுச்சுவர் கூட இல்லாததால் வெயில் மற்றும் மழை காலங்களில் விஷ ஜந்துக்கள் குடில்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியானது.
அடிப்படை வசதிகள் இன்றி வனமும் வனம் சார்ந்த பகுதியில் மலைவாழ் மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கை சொல்லில் அடங்காத வேதனையும் வலியும் நிறைந்த, உறுதியும் நிச்சயமில்லாத பெயரளவிலான வாழ்க்கை. மலைவாழ் மக்களின் துயரம் நிறைந்த வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக அமைந்து உள்ளது. கூடவே யானைகளின் நடமாட்டமும் உள்ளது. இதனால் நாள்தோறும் அச்சத்துடனே உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழும் நிலையில் மலைவாழ் மக்கள் உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
பாதை வசதி, சுகாதாரம், கல்வி, தகவல் தொடர்பு, மின்சாரம், குடியிருக்க வீடு என அடிப்படை அத்தியாவசிய தேவைகள் முழுமையாகப் பூர்த்தி அடையாமல் இன்றளவும் எட்டாக்கனியாகவே வாழ்ந்து வருகிறோம். கிடைத்ததை கொண்டு சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வீடு அமைத்துத் தரவில்லை. 40 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் பிளாஸ்டிக் பாய், குச்சிகளால் வேயப்பட்ட குடிலில் வாழ்ந்து வருகின்றோம்.
அதுவும் மழைக்காலங்களில் தண்ணீராலும் கோடை காலத்தில் காற்றால் சேதம் அடைந்து விடுகிறது. பெருமழையும் கடும் வறட்சியும் எங்களது வாழ்க்கையில் கால்நடை வளர்ப்புக்கு பெரும் சவாலாக உள்ளது. உயிரை பணயம் வைத்து அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றோம். இங்குள்ள 42 குடில்களில் மேற்கூரை முற்றிலுமாக சேதம் அடைந்து உள்ளது.
வாழ்வாதாரம் உயரும்
அடிப்படை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வசிப்பதற்கு வீடு அமைத்துக் கொடுத்தாலே போதுமானது. யாராவது உதவ வருவார்களா? எங்களது வாழ்க்கை தரம் உயருமா? அடுத்த தலைமுறையாவது வீடுகளில் வசிக்குமா? என்ற எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டு உள்ளோம். அரசும் அதிகாரிகளும் மனது வைத்தால் நிச்சயம் எங்களது நிலைமை மாறும் வாழ்வாதாரமும் உயரும்.
எனவே மாவட்ட நிர்வாகம் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு திப்பிப்பாறை பகுதியில் ஆய்வு செய்து வீடுகள் அமைத்துக்கொடுத்து அடிப்படை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.