உலக மூட்டுவாத தினத்தையொட்டிவாக்கத்தான் நடைபயணம்; 1,300 பேர் பங்கேற்பு
சேலம்
சேலத்தில் வள்ளி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபயணம் நடந்தது. இதில் 1,300 பேர் பங்கேற்றனர்.
வாக்கத்தான் நடைபயணம்
உலக மூட்டுவாத தினம் மற்றும் உலக எலும்பு புரை நோய் தினத்தையொட்டி சேலம் வள்ளி எலும்பியல் மற்றும் விளையாட்டு துறை மருத்துவமனை சார்பில் சேலத்தில் நேற்று ஆக்டிவ் சேலம் 2.0- என்ற தலைப்பில் 3 கிலோ மீட்டர் வாக்கத்தான் நடைபயணம் நடந்தது.
சேலம் மெய்யனூர் ரோட்டில் வள்ளி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த நடைபயணத்தை கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர நிலம் கையகப்படுத்துதல் துறை துணை ஆணையாளர் சக்திவேல் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். சேலம் மண்டல பி.என்.ஐ. நிர்வாக இயக்குனர் கோபிநாத் ராமமூர்த்தி, ஏ.வி.எஸ்., சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1,300 பேர் பங்கேற்பு
வள்ளி மருத்துவமனை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் நடனசபாபதி, வள்ளி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 4 வயது சிறுவர்கள் முதல் 70 வயது முதியவர்கள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் என சுமார் 1,300-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பின்னர் வாக்கத்தான் நடைபயணம் 5 ரோடு, சுவர்ணபுரி, புதிய பஸ்நிலையம் வழியாக மீண்டும் வள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. முன்னதாக இந்த வாக்கத்தான் நடைப்பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ், டி-சர்ட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மருத்துவ முகாம்
அதேபோல், பள்ளி குழந்தைகளுக்கான உடற்பயிற்சி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில், 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் மூட்டு நல விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ஆஸ்பத்திரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாய்குமாரி நன்றி கூறினார்.