பொன்னேரி நகருக்குள் தடையை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள் - போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்


பொன்னேரி நகருக்குள் தடையை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள் - போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்
x

பொன்னேரி நகருக்குள் தடையை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

திருவள்ளூர்

பொன்னேரியில் 30-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலகங்கள், 10 வங்கிகள், 3 கல்லூரிகள், 15 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், பொன்னேரி நகராட்சி அலுவலகம், 52 வழித்தடம் கொண்ட அரசு போக்குவரத்து பஸ் நிலையம், ரெயில்வே நிலையம், 5 கோர்ட்டுகள், போலீஸ் துறை உள்பட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வணிக தளமாகவும் உள்ளது. பொன்னேரியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

காட்டுப்பள்ளியில் துறைமுகங்கள் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் கன்டெய்னர் யார்டுகள் உள்பட கனரக வாகனங்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மீஞ்சூர், பொன்னேரி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனவே பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் மக்கள் நலன் கருதி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி கனரக வாகனங்கள் பொன்னேரி- மீஞ்சூர், தச்சூர் கூட்டுசாலையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதித்தார். தடையை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை கனரக வாகனங்கள் சில நாட்கள் கடைபிடித்திருந்தனர்.

பின்னர் இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு கனரக வாகனங்கள் சாலையில் செல்வதால் பொன்னேரியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், நோயாளிகள் அரசு அலுவலர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். பொன்னேரி வழியாக செல்லும் கனரக வாகனத்திற்கு அபராதம் விதிக்கவும், போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் இல்லாததால் சாலையில் கனரக வாகன ஓட்டிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story