வடிகால் வாய்க்கால் கட்டும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து காமராஜர் வீதி வரை சாலையின் இருபுறமும் புதியதாக வடிகால் வாய்க்கால் கட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு அப்பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.
தற்போது திரு.வி.க. வீதியில் இடதுபுறத்தில் புதியதாக வாய்க்கால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக பழைய வாய்க்காலை அடைத்து தூர்வாரி புதியதாக கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வேறு வழியின்றி அங்குள்ள சாலையிலேயே வழிந்தோடுகிறது.
போக்குவரத்து நெரிசல்
இது ஒருபுறம் இருக்க வடிகால் வாய்க்கால் கட்டுமான பணிக்காக பயன்படுத்தப்படும் எம்சாண்ட், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றை வாய்க்கால் ஓரமாகவே கொண்டு வந்து கொட்டி வைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திரு.வி.க. வீதியில் பழைய சட்டக்கல்லூரி செயல்பட்ட இடத்திலோ அல்லது நகராட்சி பள்ளி மைதானம் செல்லும் வழியில் சாலையோரமாகவோ இவற்றை கொட்டி வைத்து பணிகளை மேற்கொள்ளலாம்.
ஆனால் அவ்வாறு மேற்கொள்ளாமல் வடிகால் வாய்க்கால் கட்டப்படும் இடத்தின் ஓரமாகவே எம்சாண்ட், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றை கொட்டி வைத்து பணிகளை மேற்கொண்டு வருவதால், அந்த வழியாக வாகன ஓட்டிகள் சரிவர செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைக்காக இவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகளும் விரைந்து முடிக்கப்படாமல் இடையூறாக அமைகிறது.
பணிகளை விரைந்து முடிக்க...
இந்த வாய்க்கால் கட்டும் பணியை விரைந்து முடிக்காததால் தங்களுடைய வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இங்கு வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு எம்சாண்ட், ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவற்றை பணிகள் நடக்கும் வாய்க்கால் ஓரமாகவே கொட்டி வைக்காமல் பழைய சட்டக்கல்லூரி வளாகத்திலோ அல்லது நகராட்சி பள்ளி மைதானம் செல்லக்கூடிய சாலையோரமாகவோ கொட்டி வைத்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.