கனமழை பாதிப்பு: உதவிக்கரம் நீட்டிய மீனவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு...!
திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் மீட்க அருகில் உள்ள கிராம மக்கள் உதவி செய்தனர்.
சென்னை,
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கனமழை பாதிப்பின் போது மீட்பு பணிகளில் மீனவர்கள் மற்றும் பொது மக்கள் மிக பெரிய அளவில் உதவிக்கரம் நீட்டினர். குறிப்பாக திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளை மீட்க அருகில் உள்ள கிராம மக்கள் உதவி செய்தனர்.
இந்த நிலையில் உதவி செய்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும், "மற்றவர்களுக்கு செய்யும் சேவையில் உங்களை அர்பணிப்பதே உங்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி" என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் சொன்னதை நினைவுபடுத்துகிறது.
அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும், என்று அவர் பதிவிட்டுள்ளார்.