கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் மலை ரெயில் சேவை ரத்து
குன்னூர்- உதகை இடையே மலை ரெயில் சேவை இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை,
நீலகிரி மலை ரெயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் பயணம் செய்து அங்குள்ள இயற்கை சூழலை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. தண்டவாள பாதையில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணிகள் தாமதமானதால் மேட்டுப்பாளையம்- உதகை மலை ரெயில் சேவை மூன்று நாட்களாக ரத்துசெய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம்- உதகை மலை ரெயில் சேவை இன்றும் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மலை ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. மேலும், குன்னூர்- உதகை இடையே மலை ரெயில் சேவை இயக்கப்படும் எனவும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.