வெம்பக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை


வெம்பக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை
x

வெம்பக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

விருதுநகர்

வெம்பக்கோட்டை ஒன்றியம் கோமாளிபட்டி, கோட்டைப்பட்டி, கண்டியாபுரம், விஜயரெங்கபுரம், மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, சூரார்பட்டி, வெம்பக்கோட்டை, கீழச்செல்லையாபுரம், ஏழாயிரம் பண்ணை, பனையடிப்பட்டி, தாயில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்தது.

2 மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையினால் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டு வீட்டிற்கு திரும்பினர். வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை சிறிதாக இருந்ததால் மழைக்கு ஒதுங்க முடியாமல் சாலையில் நனைந்தபடி பயணிகள் பஸ்சிற்காக காத்திருந்தனர்.

வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே சிவகாசி, சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் ஒரு வங்கிக்கு அருகே மழை நீர் செல்ல வழி இல்லாததால் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.

குகன் பாறையில் இருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் மெயின் ரோட்டில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் சென்றதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. வெற்றிலையூரணியில் உள்ள தெப்பம் தூர்வாரப்பட்டு வருவதால் ஊருணிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை தொடர்ந்து பெய்தால் ஊருணி நிரம்ப வாய்ப்புள்ளது.

மழை காரணமாக பட்டாசு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. பட்டாசு தொழிலாளர்கள் உடனடியாக ஆலை வாகனத்தில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பம் தணிந்து இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.



Next Story