கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை


கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை
x

கோப்புப்படம்

நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்று கோவை, நீலகிரியில் கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக வானிலைமையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கனமழை எச்சரிக்கையை அடுத்து கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையின் இரண்டு குழுக்கள் கோவை, நீலகிரிக்கு விரைகின்றன.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டதால் துணை கமாண்டண்ட் தலைமையில் குழு விரைகிறது. இரண்டு குழுக்களை சேர்ந்த 60 பேர் நீலகிரி, கோவை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.


Next Story