தூத்துக்குடியில் பெருவெள்ளம்.. அவசர உதவிக்கு வாட்ஸ்அப் எண்ணை அறிவித்த கனிமொழி எம்.பி.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93 செமீ அளவு மழை பதிவாகியிருக்கிறது. ஓர் ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி மக்களவை தொகுதி தி.மு.க. உறுப்பினர் கனிமொழி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம்.
மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம்.
தொடர்பு எண்: +91 80778 80779
இவ்வாறு கூறியுள்ளார்.