கழுத்தை நெரித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டு நாடகமாடியது அம்பலம்


கழுத்தை நெரித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டு நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே பெண் மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கழுத்தை நெரித்து கொன்று மரத்தில் தொங்க விட்டு நாடகம் ஆடிய கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

தூக்கில் தொங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பா.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி பாபு(வயது 29). இவரது மனைவி அம்சலேகா(27). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நிகில்(2½) என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள முள்வேலி மரத்தில் அம்சலேகா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இது குறித்து திருநாவலூர் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கணவர் மீது சந்தேகம்

போலீசாரின் விசாரணையில் அம்சலேகாவின் கணவர் பாபு மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அம்சலேகாவை கொலை செய்து மரத்தில் தொங்க விட்டது தெரியவந்தது.

கழுத்தை நெரித்து கொலை

இது குறித்து பாபு போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று வீட்டில் குடிபோதையில் இருந்த எனக்கும் அம்சலேகாவுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். இதில் மயங்கி விழுந்த அம்சலேகா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாள். இதைப்பார்த்த நான் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக எனது அக்கா ராஜேஸ்வரி, அவரது கணவர் ரவி மற்றும் நண்பர் ராஜீவ்காந்தி(37), அவரது மனைவி மகாலட்சுமி(34) ஆகியோரை உதவிக்காக அழைத்தேன். அவர்கள் வந்ததும் மயக்க நிலையில் கிடந்த அம்சலேகாவின் கழுத்தை புடவையால் இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவளது உடலை வீட்டின் பின்புறம் உள்ள முள்வேலி மரத்தில் தூக்கில் தொங்க விட்டு அவள் தற்கொலை செய்துகொண்டதாக நாடகம் ஆடினேன். ஆனால் எப்படியோ போலீசாரின் விசாரணையில் சிக்கிக்கொண்டதாகதெரிவித்தார்.

3 பேர் கைது

இதையடுத்து பாபு, அவரது நண்பர் ராஜீவ்காந்தி, இவரது மனைவி மகாலட்சுமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அம்சலேகாவின் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரவி, ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெண் மர்மசாவு வழக்கில் வழக்கில் அவரது கணவரே உறவினர், நண்பர்கள் உதவியுடன் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story