உழவன் செயலி மூலம் அறுவடை எந்திரங்கள் பெற்று பயன் பெறலாம் - கலெக்டர் தகவல்


உழவன் செயலி மூலம் அறுவடை எந்திரங்கள் பெற்று பயன் பெறலாம் - கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலம் அறுவடை எந்திரங்களை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிக்க அதிக நேரமும் அதிக அளவில் வேலையாட்களும் தேவைப்படுகிறது. கால விரயத்தை தவிர்க்கவும், வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், வேளாண்மை எந்திரமயமாக்குதல் இன்றியமையாததாகிறது.

அதிக விலையுள்ள வேளான் எந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளான் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுவதுடன், அரசுத் திட்டங்கள் மூலம் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

அறுவடை காலங்களில் நெல் அறுவடை எந்திரங்களின் தேவை அதிகரிக்கும் போது வாடகைத்தொகை உயர்ந்து விடுகிறது. இதனால் வேளாண் வருமானம் குறைவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வேளாண்மை பொறியியல் துறைக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரங்களின் மூலம் விவசாயிகளின் தேவையை ஓரளவே தீர்க்க முடியும். மேலும் தனியார் நெல் அறுவடை எந்திரங்களின் விவரங்கள் விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இதனால் விவசாயிகள் குறித்த காலத்தில் நேல் அறுவடை செய்ய தீர்வாக தனியாருக்கு சொந்தமான நெல், மக்காச்சோளம், பயறு, தானிய வகைகள் அறுவடை செய்யும் எந்திரங்களின் உரிமையாளர், பெயர், விலாசம், செல்போன் எண் போன்ற விவரங்கள் வட்டாரம் மற்றும் மாவட்ட வாரியாக உழவன் செயலியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 36 சக்கரவகை அறுவடை எந்திரங்களும், 37 டிராக்டர் வகை அறுவடை எந்திரங்களும் உழவன் செயலையும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறுவடை எந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அறுவடை எந்திர உரிமையாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தாங்களே வாடகை நிர்ணயம் செய்து பயனடையலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story