பிரதமர் மோடிக்கு, அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து


பிரதமர் மோடிக்கு, அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
x

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், ‘மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான தலைவர்' என புகழாரம் சூட்டி உள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மனதில் உறுதியும், வாக்கினிலே இனிமையும், வாழ்க்கையில் நேர்மையும், ஒளி படைத்த கண்ணும் உறுதி கொண்ட நெஞ்சமாக இந்திய தேசத்தின் வெற்றி பயணத்திற்கு மாலுமியாக வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி.

நம் இந்திய மண் பயனுறவும், நிலவில் கூட நம் கால் படவும்... நினைக்க முடியாத சாதனைகள் எல்லாம், நிஜத்தில் செய்து காட்டி அவர் மீது சுமத்தப்பட்ட கேள்விக்குறிகளையெல்லாம்… வியப்பு குறிகளாக மாற்றிக் காட்டிய வித்தகர்.

அறிவுசார் ஞானியா! அனைத்தும் துறந்த முனியா! தேசத்தின் காவல் தெய்வமா! முன்னேற்றத்திற்கான போராளியா! உலகம் போற்றும் விஸ்வ குருவா! சாமான்ய மக்களின் சங்கடம் தீர்க்க வந்த சரித்திர நாயகனா! இப்படி எல்லாம் உலகத்தின் பத்திரிகைகள் எல்லாம் வியந்து போற்றும் அளவிற்கு நம் நாட்டிற்கு கிடைத்த தன்னலமற்ற நேர்மையான மாபெரும் தலைவருக்கு பிறந்தநாள்.

தொடர்ந்து முதல் இடம்

அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட குளோபல் லீடர் அப்ரூவல் படி பிரதமர் மோடி 76 சதவீத புள்ளிகள் பெற்று உலகத் தலைவர்களின் புகழ் வரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாக நமது பிரதமர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 நாடுகளின் மூத்த தலைவர்களை பாரதம் அழைத்து வந்து ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டிய அருமைக்குரியவர். தமிழ் தன் தாய் மொழியாக இல்லையே, தன்னால் தமிழில் பேச முடியவில்லை என்று பலமுறை வருத்தம் தெரிவித்தவர். உலக நாடுகளில் எல்லாம் நம் தமிழ் மொழியின் தொன்மையையும் பெருமையையும் எடுத்துக்கூறி மகிழ்ந்தவர்.

நூற்றுக்கும் அதிகமான மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்ட தமிழ் செம்மல் மோடி. திருவள்ளுவருக்கு பிரான்சில் சிலை திறக்க ஏற்பாடுகள் செய்தவர். தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாய பாடம் ஆக்கி தமிழ் வழியிலே கல்வி கற்க ஆவன செய்தவர்.

மகத்தான தலைவர்

மோடியின் 9 ஆண்டுகால நல்லாட்சியில் தமிழகம் நேரடியாக ஏராளமான நன்மைகளை பெற்றுள்ளன. நான்… என்… எனது… என்ற சுயநலமிக்க அரசியல்வாதிகளையே பார்த்து பழகிய தமிழக மக்களுக்கு, நாம்… நம்… நமது… என்று நம்பிக்கை தந்தவர் மோடி. சொந்த நலனுக்காக விடுமுறையோ ஓய்வு எடுக்காமல், தன் குடும்பத்தினருக்காக ஆதாயம் தேடாமல், நாட்டு மக்களுக்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான தலைவருக்கு தமிழக மக்கள் சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story