நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் ஒப்படைப்பு
குற்றவாளிகள் எங்கள் கட்சியை சேர்தவராக இருந்தாலும், நாங்கள் விடமாட்டோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். மேலும் காண்டிராக்டர் தொழிலும் செய்து வந்தார்.
கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.
வீட்டை ஒட்டி உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதமானது கடந்த 30-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் 'லெட்டர் பேடில்' 'மரண வாக்குமூலம்' என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எழுதப்பட்டு இருந்தது.
அதில், தனக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது. எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இந்த கடிதத்தில் நான் குறிப்பிட்ட நபர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் அந்த கடிதத்தில் சிலரது பெயர்களையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த நபர்கள் தனக்கு லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து ஜெயக்குமாரின் மூத்த மகன் கருத்தையா ஜெப்ரின் காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி நேற்று முன்தினம் உவரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்கை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
நேற்று காலையில் அவரது வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் உடல் எரிந்த நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த தோட்டத்தில் வேலை செய்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசாரும் அங்கு வந்தனர்.
அப்போது, பிணமாக கிடந்தவர் ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பிணமாக கிடந்த ஜெயக்குமாரின் கை, கால்கள் பலகையில் மின் ஒயரால் கட்டப்பட்டும், உடல் கருகிய நிலையிலும் இருந்தது. எனவே, அவரை யாரேனும் கை-கால்களை கட்டி கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரித்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பின்னரே அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். தற்போது சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் டாக்டர் செல்வமுருகன் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் உடல் குளிர்பதன அறையில் வைக்கப்பட்டது.
உடல் ஒப்படைப்பு
இந்நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரின் அவரது உடலை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து இன்று ஜெயக்குமாரின் உடல் சொந்த ஊரில் உள்ள தேவாலயத்தில், இறுதி பிரார்த்தனைக்குப் பின் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார்.
இதனிடையே ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த ஜெயக்குமாருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், கேத்தரின் என்ற மகளும், கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
கட்சி ரீதியாக விசாரணை
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு காவல்துறை, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். கட்சி ரீதியாகவும் விசாரணை நடத்த கமிட்டி அமைத்துள்ளோம். குற்றவாளிகள் எந்த பின்புலம் கொண்டவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றவாளிகள் எங்கள் கட்சியை சேர்தவராக இருந்தாலும், நாங்கள் விடமாட்டோம். கட்சி ரீதியாக விசாரணை நடத்தி, அகில இந்திய தலைமையிடம் அறிக்கை அளிப்போம். மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளது. காவல்துறை புலன் விசாரணை செய்து வருகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. உறுதியளித்துள்ளார்" என்று அவர் கூறினார்.