கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து - தமிழக அரசு அறிவிப்பு


கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து - தமிழக அரசு அறிவிப்பு
x

சென்னை கிண்டி ரேஸ் கோர்சுக்கான குத்தகையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

சென்னை கிண்டி ரேஸ் கோர்சுக்கான குத்தகையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்தை சென்னை மாவட்ட கலெக்டர் கையகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை கிண்டியில் மிக பிரமாண்டமான பரப்பளவில் குதிரை பந்தய மைதானம் (ரேஸ் கிளப்) அமைந்துள்ளது. இது ஒரு காலகட்டத்தில் மிக பிரபலமான குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. 160.86 ஏக்கர் கொண்ட அந்த இடம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கியதாக (தற்போதைய சென்னை மாநகராட்சி பகுதி) இருந்தது.

அந்த பகுதியை 99 ஆண்டுகள் குத்தகைக்காக 1.4.1945 முதல் 31.3.2044 வரை வழங்கப்பட்டது. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்றால், ஆண்டுக்கு ரூ.614.13 அணாக்கள் (அப்போதைய மதிப்பில்) ஆகும். இந்த குத்தகை ஒப்பந்தம் 8.3.1946 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த குத்தகை ஒப்பந்தத்துக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் குத்தகை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு 2009-ம் ஆண்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் கிண்டி தாசில்தார், அந்த ரேஸ் கிளப்புக்கு 13.7.2015 அன்று நோட்டீசு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, கிண்டி தாசில்தார் முன்பு விசாரணைக்காக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதனைத்தொடர்ந்து ரேஸ் கிளப் அளித்த மனுவை, தாசில்தார் பரிசீலித்து 22.7.2015 அன்று நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும் நிலத்தின் மதிப்பு 1970-ம் ஆண்டு மதிப்பின்படி உயர்ந்திருப்பதால், 14 சதவீதம் உயர்த்தப்பட்ட குத்தகை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதுபோன்ற நோட்டீசை வேளச்சேரி தாசில்தாரும் பிறப்பித்திருந்தார். அவரும், உயர்த்தப்பட்ட குத்தகை தொகையை செலுத்தக்கோரி கூறியிருந்தார்.

இந்த குத்தகை தொகைகள் தரப்படவில்லை என்பதால், சென்னை கலெக்டர் சில நடவடிக்கைகளை எடுத்து, வருவாய் வசூலிப்பு சட்டத்தின்படி ரேஸ் கிளப்பிடம் இருந்து தொகையை வசூலிப்பதற்கு கிண்டி மற்றும் வேளச்சேரி தாசில்தார்களுக்கு 14.11.2027 அன்று உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ரேஸ் கிளப் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் பொதுவான உத்தரவு ஒன்றை சென்னை ஐகோர்ட்டு 29.3.2023 அன்று பிறப்பித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு அமர்வு நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் அப்பீல் மனு தாக்கல் செய்தது. அந்த அப்பீல் மனு மீது ஐகோர்ட்டு, இதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை வழங்கியது.

2017-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த வழக்கில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, வேளச்சேரி மற்றும் கிண்டி தாசில்தார்கள் மற்ற அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து ரேஸ் கிளப்பில் ஆய்வு செய்யலாம் என்றும், அதில் குத்தகை நிபந்தனைகள் எதுவும் மீறப்பட்டிருக்கிறதா? என்பதை அடையாளம் காணவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

எனவே சென்னை டி.ஆர்.ஓ. உள்ளிட்ட 7 அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 2018-ம் ஆண்டு மிக விளக்கமான ஒரு ஆய்வை மேற்கொண்டு நிபந்தனை மீறல்களை கண்டறிந்தது. குத்தகைக்கு விடப்பட்ட இடத்தில் அரசின் அனுமதி இல்லாமல் கோல்ப் விளையாட்டை நடத்துவதற்கு கட்டணம் பெற்று அனுமதி அளித்ததும், எழுத்து மூலமாக அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியது, குத்தகை எடுத்த இடங்களை திருமண மண்டபங்கள் உள்ளிட்ட வர்த்தக பயன்பாட்டுக்காக பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குத்தகை விதி மீறல்கள் கண்டறியப்பட்டன.

அதுபோல பட்டாவிலும் பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்த குத்தகை மீறல்களை அறிக்கையாக அரசுக்கு அந்த குழு அளித்தது. அதன் அடிப்படையில் இந்த குத்தகையை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்ற விளக்க நோட்டீசை ரேஸ் கிளப்புக்கு, 16.4.2018 அன்று சென்னை கலெக்டர் அனுப்பினார். கலெக்டரின் இந்த விளக்க நோட்டீசுக்கு 21.5.2018 அன்று ரேஸ் கிளப் அளித்த பதிலை, சென்னை கலெக்டர் பரிசீலித்து அதிலுள்ள குறிப்புகளை 15.6.2021 அன்று அரசுக்கு அனுப்பினார். அதில், ரேஸ் கிளப்புக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தார்.

இந்தநிலையில் சட்டத்தில் இடம் இருந்தால், குத்தகையை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம் என்று கடந்த 4-ந்தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. எனவே ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்த குத்தகை விதி மீறல்கள் அடிப்படையில் சென்னை மாவட்ட கலெக்டர் கொடுத்த அறிக்கையில் குத்தகை விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அரசு குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்று உத்தரவிடுகிறது.

மேலும் அந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, அதாவது அரசு அலுவலகங்கள், அரசு தோட்டங்கள், திறந்த வெளிகள் போன்றவற்றை ஏற்படுத்தி கொள்ளலாம் என்று அரசு கருதுகிறது. எனவே உடனடியாக சென்னை கலெக்டர் அந்த இடத்தை தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும். அங்குள்ள அசையும் சொத்துகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக 14 நாட்களுக்குள் ரேஸ் கிளப், கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை, அந்த ரேஸ் கிளப் பகுதி முழுவதையும் தன்வசம் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story