சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் சட்டத்தை மீறி செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது - அமைச்சர் சேகர்பாபு பேட்டி


சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் சட்டத்தை மீறி செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x

சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் சட்டத்தை மீறி செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என்று அமைச்சர்பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் 20-ந்தேதி சுப முகூர்த்த நாளில் வடபழனி முருகன் கோவிலில் 30 திருமணங்கள் நடக்க இருக்கிறது. டிசம்பர் 4-ந்தேதி 30 திருமணங்கள் நடத்துவதற்கு இதுவரையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் இந்த மாதம் 20-ந்தேதி 11 திருமணங்களுக்கும், டிசம்பர் 4-ந்தேதி 12 திருமணங்களுக்கும் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கின்றது.

சிறுவாபுரி முருகன் கோவிலில் அண்மையில் தான் கும்பாபிஷேகம் முடிவடைந்தது. சிறுவாபுரி கோவிலிலும் திருமணங்கள் நடைபெறுவதற்கு உண்டான உத்தரவு வழங்கப்படும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் அதனை அரசு எடுக்க வேண்டும் என்ற வகையில் எங்களுடைய செயல்பாடுகளை முடுக்கி விடவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரத்துக்குட்பட்ட கோவில்களில் நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டும் என்பது தான் இந்து சமய அறநிலையத்துறையின் மேலான எண்ணம்.

சட்டத்திற்கு மீறிய செயல்கள் எங்கு நடந்தாலும் அதை கட்டுப்படுத்துகின்ற, முழுவதுமாக அப்புறப்படுத்துகின்ற நிலையை மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருக்கின்றார். ஆகவே நாங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் மிகவும் கவனமாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்றோம்.

15-ந்தேதியோடு காலக்கெடு முடிந்திருந்தால் அடுத்து என்ன செய்யலாம் என்பதை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்த நடவடிக்கைக்கு செல்வோம். இந்து சமய அறநிலையத்துறையின் சட்டதிட்டங்கள் என்ன சொல்கிறதோ அதற்குட்பட்டு விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகளை சரிசெய்ய வேண்டும். விதி மீறல்களை முழுவதுமாக அப்புறப்படுத்துவோம். பக்தர்களால் வழங்கப்பட்ட காணிக்கைகள் முறையாக அந்த கோவிலின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்ற பணிகளுக்கு செலவிடப்பட வேண்டும். மற்ற கோவில்களில் என்னென்ன வழிமுறைகளை விதிமுறைகளை பின்பற்றுகிறோமோ, அதையேதான் சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் பின்பற்றுகிறோம். இன்னார், இனியவர் என்று பார்ப்பதற்கு துறை தயாராக இல்லை. இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகள் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுகிறது.

கடந்தாண்டு பருவ மழையின்போது சென்னை மாநகரம் ஸ்தம்பித்ததை நீங்கள் அறிவீர்கள். 33 செ.மீ. அளவிற்கு பெய்த மழைக்கே சென்னை மாநகரம் தத்தளித்தது. இந்தாண்டு 46 செ.மீ. மழை பெய்தும் மழை விட்ட 24 மணி நேரத்தில் முழுவதுமாக எல்லா இடங்களிலும் தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது.

அடுத்த பருவமழைக்குள் எங்கும் தண்ணீர் தேங்காத ஒரு நிலையை முதல்-அமைச்சர் தனது செயல்திறன் மற்றும் துரித நடவடிக்கைகளால் ஏற்படுத்தி காட்டுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story