எண்ணூர் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை எண்ணூரில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் உர நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். எண்ணூர் மக்கள் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். எண்ணூர் பகுதி மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவை தெரிவிக்கிறது.
வல்லுனர் குழு நேரடியாகவே ஆலையை திறக்க அனுமதி அளித்து விட்டதாக ஆலைத் தரப்பில் செய்தி பரப்பப்படுவது மக்களை ஏமாற்றும் செயல். அரசையும், மக்களையும் ஏமாற்றும் நோக்கத்துடன் உர ஆலை தவறான செய்திகளை பரப்பி வருவதை கண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ அரசு முன்வரவில்லை.
எண்ணூர் கோரமண்டல் உர ஆலையில் வல்லுனர் குழு நடத்திய ஆய்வு குறித்த விவரங்களையும் தாக்கல் செய்த அறிக்கையையும் பொதுமக்கள் பார்வைக்கு தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். வல்லுனர் குழுவின் பரிந்துரை என்னவாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், போராட்டம் நடத்தி வரும் மக்களின் உணர்வுகளை மதித்து கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும். அத்துமீறும் எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?; மக்கள் உணர்வுகளை மதித்து ஆலையை மூட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.