கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் - செல்வப்பெருந்தகை


கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் - செல்வப்பெருந்தகை
x

கோப்புப்படம் 

கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரத்தையும் தருகிறது. மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல என்று மாவட்ட கலெக்டர் மறுத்திருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் கள்ளச்சாராயம் குடித்துதான் உயிரிழந்திருக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.

கடந்த 20.05.2023 அன்று விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 நபர்கள் உயிரிழந்து ஒரு வருடத்திற்குள் மேலும் அதேபோன்று துயரமான சம்பவம் நடந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தொடர்ச்சியாக விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதை விற்பதனால் உயிர்பலி ஆவதும் தொடர்கதையாகவுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், அதனை விற்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.

கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டு வழங்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story