பிடிஎஸ் குழுவை பார்ப்பதற்காக கரூரில் இருந்து கொரியா செல்ல முயன்ற அரசுப்பள்ளி மாணவிகள் - போலீசார் மீட்பு
கொரியாவில் பிரபல பிடிஎஸ் இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்க்க மாணவிகள் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
வேலூர்,
கொரியாவின் பிடிஎஸ் இசைக்குழு மீதான ஈர்ப்பால் கரூரில் இருந்து கொரியா செல்ல முயன்ற 3 அரசுப்பள்ளி மாணவிகளை ரெயில்வே போலீசார் காட்பாடியில் பத்திரமாக மீட்டனர்.
கரூர் மாவட்டம் தான்தோணிமலை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த 3 சிறுமிகள், கடந்த 4ம் தேதி வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பேருந்து நிலையம், ரெயில்வே நிலையங்களில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்தனர்.
இதில், 3 சிறுமிகளும் காட்பாடி ரெயில்வே நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் ரெயில்வே நிலையத்தில் தேடியபோது, காணாமல் போன 3 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர். கொரியாவில் பிரபல பிடிஎஸ் இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்க்க மாணவிகள் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.