ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க போலியாக அரசு டாக்டர் கையெழுத்து - தனியார் இ-சேவை மைய பெண் நிர்வாகி கைது


ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க போலியாக அரசு டாக்டர் கையெழுத்து - தனியார் இ-சேவை மைய பெண் நிர்வாகி கைது
x

ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க போலியாக அரசு டாக்டரின் கையெழுத்து மற்றும் முத்திரையை பயன்படுத்தி மோசடி செய்த தனியார் இ-சேவை மையத்தின் பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஒட்டி, தனியார் இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு, ஆதார் கார்டு விண்ணப்பிக்க வந்த மூதாட்டி ஒருவருக்கு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றும் காமேஷ் பாலாஜி என்பவர் பெயரில் போலியாக கையெழுத்து போட்டு போலி முத்திரையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அரசு டாக்டர் காமேஷ் பாலாஜி, தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை, அந்த இ-சேவை மையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு போலி முத்திரை இருந்தது தெரியவந்தது. மேலும், அரசு டாக்டர் பெயரில் போலி முத்திரை மற்றும் கையெழுத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதும் உறுதியானது.

இதையடுத்து, அந்த மையத்தின் பெண் நிர்வாகியான மேற்கு தாம்பரம், ஜெருசலம் நகர், சர்ச் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவருடைய மனைவியான சசிகலா (வயது 34) என்பவரை கைது செய்தனர்.

இந்த மையத்தில், பல போலி முத்திரைகளை பயன்படுத்தி, ஏராளமான மோசடி நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து, தாம்பரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சண்முகம், எலியாஸ் ஆகிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story