கிண்டி சின்னமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் - திருமாவளவன் கைதாகி விடுதலை
கிண்டி சின்னமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவர்னரை கண்டித்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடந்தது. திருமாவளவன் உள்ளிட்டோர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை கிண்டி சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நேற்று கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபண்னா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கவர்னருக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசி்யதாவது:-
தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்று இருக்ககூடாது. தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார். கவர்னர் பதவியில் இருந்து விலகி விட்டு ஆர்.எஸ் எஸ்-ல் சேர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும். கவர்னர் பக்குவமற்ற தன்மையில் இருக்கிறார்.
முதல்-அமைச்சர் நாகரீகமாக கூறியதை தொடர்ந்து சட்டசபையை விட்டு வெளியேறியது தவறு. டெல்லிக்கு செல்லும் கவர்னரிடம் அமித்ஷா, மோடி ஆகியோர் என்ன சதி செய்ய சொல்லி அனுப்பினாலும் அது தமிழ்நாட்டில் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
கவர்னர் சட்டசபையில் நடந்து கொள்வது மட்டும் பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டுக்கு வந்ததில் இருந்தே பிரச்சினைதான். பொது நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக சனாதனத்தை மட்டுமே பேசுகிறார்.
தமிழ்நாடு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அழைக்கப்பட்டும் வருகிறது. அண்ணாவுக்கு முன்பாகவே பெருந்தலைவர் காமராஜர் முன்னெடுத்ததை அண்ணா ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது.
கவர்னராக நியமிக்கப்படுவர் ஒரு அரசியல் கட்சியாக செயல்பட கூடாது. ஆனால் ஆர்.என்.ரவி, முழுமையான அரசியல்வாதியாக செயல்படுகிறார்.
சனாதனத்தை நிலைநாட்டுவதே ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருப்பவர்களை கவர்னராக நியமிக்க கூடாது. தமிழ்நாட்டை பா.ஜ.க. குறி வைத்து விட்டார்கள். ஆனால் ஒரு முறைகூட 10 சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்ப முடியவில்லை. பா.ஜ.க.வை யார் விரட்டுகிறார்களோ இல்லையோ விடுதலை சிறுத்தைகள் கட்சி விரட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி. உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். தடையை மீறி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருமாவளவன் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து நந்தனம் ஓ.எம்.சி.ஏ. மைதானத்துக்கு பஸ்சில் அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.