செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றார் கவர்னர் ஆர்.என்.ரவி
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளபோதும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்து வந்தார். அவருக்கு எந்த இலக்காக்களும் ஒதுக்கப்படாமல் இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
இதையடுத்து, 8 மாதங்களாக சிறையில் உள்ள சூழலில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி நேற்று ராஜினாமா செய்தார். இலாக்கா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை முதல்-அமைச்சருக்கு செந்தில் பாலாஜி அனுப்பினார். இதையடுத்து ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கு முதல்-அமைச்சர் அனுப்பிவைத்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளதாக கவர்னர் மாளிகை தரப்பில் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.