பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி


பரபரப்பான அரசியல் சூழலில்  டெல்லி புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 14 March 2024 6:41 AM IST (Updated: 14 March 2024 12:59 PM IST)
t-max-icont-min-icon

பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுள்ளார். டெல்லி பயணத்தை முடித்து விட்டு 16 -ம் தேதி கவர்னர் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை மீண்டும் பெற்று இருக்கும் பொன்முடிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பதவிப்பிரமாணத்தை இன்று செய்து வைக்க வேண்டும் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், கவர்னருக்கு நேற்று பரிந்துரை அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளதால், பொன்முடி அமைச்சராகும் தேதி சற்று தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.

16-ந் தேதிக்கு முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில், அமைச்சராக பொன்முடியை கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா? என்ற சந்தேகமும், சட்டச்சிக்கலும் எழுகிறது.


Next Story