அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தர்ணா
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) சார்பில் அனைத்து மண்டலங்களிலும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சி மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கருணாநிதி, சண்முகம், மண்டல பொருளாளர் சிங்கராயர், துணை பொதுச்செயலாளர்கள் சுப்பிரமணியன், முருகன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஒப்பந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். புதிய திட்டத்தை கைவிட்டு 15-வது ஊதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். சி.ஐ.டி.யு. மாநகர மாவட்ட செயலாளர் ரங்கராஜன் நிறைவுரையாற்றினார். பொதுச்செயலாளர் மாணிக்கம் நன்றி கூறினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் அருள்தாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.