நிவாரண பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது: மத்திய குழு பாராட்டு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவித்ததற்காக தமிழக அரசை மத்திய குழு பாராட்டியுள்ளது.
சென்னை,
மிக்ஜம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதனையடுத்து இந்த வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்தியக் குழு தமிழகம் வந்தது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து வட மற்றும் தென் சென்னை பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
புயல் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியக் குழு அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியக் குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி பேசுகையில், "மிக்ஜம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளைத் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ. 6 ஆயிரம் நிவாரணம் அறிவித்ததற்கு பாராட்டுகள். வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கையை அடுத்து தமிழ்நாடு அரசு தகுந்த அறிவியல்பூர்வ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே திறந்து விடப்பட்டதால் வெள்ளச் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.
தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு நிவாரணப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டனர். எங்கள் குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களைப் பார்வையிட்டு உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து விவரங்களைத் திரட்டியுள்ளது. அதன் அடிப்படையில் குழு தயாரிக்கும் ஆய்வு அறிக்கை மத்திய அரசுக்கு அளித்து நிவாரண உதவிகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.